Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59 கோடி செலவில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்

*திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டத்தால் கிராமமக்கள் மகிழ்ச்சி

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லபட்டியில் ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமான பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காமல் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குஜிலியம்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் பாளையம் பேரூராட்சி 14வது வார்டு ஆர்.கொல்லபட்டியில் வறட்டாறு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் இக்கிராமத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இவ்வழித்தடத்தில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டி தர வேண்டும் என பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய பாலம் கட்ட முடிவு செய்து, மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டு, பேரூராட்சி இயக்குநகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாளையம் பேரூராட்சி 2023- 2024ம் ஆண்டு மூலதன மான்ய நிதி திட்டத்தில் ஆர்.கொல்லப்பட்டியில் ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில் பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்து புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் இக்கிராம மக்களின் பல வருட காலம் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்.கொல்லபட்டி கிராமமக்கள் கூறியதாவது: ஆர்.கொல்லபட்டியில் வறட்டாறு செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் மழையின் போது, வறட்டாற்றில் இருந்து வரும் மழைநீர் முழுவதும் இந்த தரைப்பாலம் வழியே பெருக்கெடுத்து ஓடும். மழைநீர் வடிந்த பிறகே இந்த தரைப்பாலத்தை கிராமமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் கடந்து செல்ல முடியும். இதனால் இவ்வழித்தடத்தில் பாலம் கட்டி தர வேண்டும் என கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு, கிராமமக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களும் இச்சாலை வழியே கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். எனவே இவ்வழித்தடத்தில் புதிய பாலம் கட்டி தர வேண்டும் என அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, காந்திராஜன் எம்எல்ஏ, பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி ஆகியோரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் இக்கிராம மக்களின் பல ஆண்டு கால போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் கிடந்த இத்திட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு கூறினர்.