Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3,000-வது குடமுழுக்காக நடைபெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர், அருள்மிகு அக்னிஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (05.06.2025) நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம், அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 2025 - 2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்களில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள், இந்த அரசு பொறுப்பேற்றபின், 3,000-வது நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் ஆதீன பெருமக்கள் மற்றும் இறையன்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் பக்தர்கள் தங்கும் விடுதியையும், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் யானை பராமரிப்பு, திருக்குளம் பராமரிப்பு, பசுமடம், திருநீறு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அதனைத் தொடர்ந்து, அந்தநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகக் கட்டடத்தையும், பழூர், அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தையும், பிச்சாண்டவர் கோயில், அருள்மிகு உத்தமர் திருக்கோயிலில் பசுக்கள் காப்பக கட்டடத்தையும், திருப்பைஞ்ஞீலி, அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயிலில் செயல் அலுவலர் அலுவலக கட்டடத்தையும் திறந்து வைத்தோம்.

அதனைத் தொடர்ந்து, சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.2 கோடி செலவில் திருக்கோயில் கோபுரங்கள், தங்க விமானம் மற்றும் மதிற்சுவர்களை ஒளிரும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தோம். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருக்காவூர், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்வதற்கு 408 கிலோ 145 கிராம் வெள்ளிக் கட்டிகளை வழங்கி பணிகளை தொடங்கி வைத்தோம்.

இன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம், அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 2025 - 2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். அதனைத் தொடர்ந்து, இந்த அரசு பொறுப்பேற்றபின், 3,000 வது குடமுழுக்காக வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருப்புகலூர், அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆதீன பெருமக்கள், இறையன்பர்கள் மற்றும் உபயதாரர்கள் ஒத்துழைப்புடன் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோம்.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது, இந்த ஆட்சி பொறுப்பேற்றால் ஆன்மிக தழைத்தோங்காது என்ற கூற்றையும் அடித்து நொறுக்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு சுதந்திரத்தை அளித்து பல்வேறு திருப்பணிகள் நடைபெறவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி தரவும் உத்தரவிட்டார்கள். அதன் காரணமாகவே இன்றைய தினம் 3000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் 3500 திருக்கோயில்களின் குடமுழுக்கை எட்டுவோம்.

முதலமைச்சர் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணி மண்டம் அமைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, வேதாரண்யம் வட்டம், துளசியாபட்டினத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளையும் இன்றைய தினம் ஆய்வு செய்யவுள்ளேன். இந்த அரசு திருவள்ளுவர், சேக்கிழார், அவ்வையார் போன்ற சான்றோர் பெருமக்களுக்கும், சித்தர்களுக்கும் புகழ் சேர்க்கின்ற வகையில் விழாக்களை நடத்துவதோடு மணிமண்டபங்களையும் சீரமைத்து பெருமை சேர்க்கின்றது. இப்பணிகளால் இறையன்பர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள் இந்து சமய அறநிலையத்துறையை மென்மேலும் சிறப்பாக செயலாற்ற தூண்டுகோலாக அமைந்துள்ளன.

1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயில்களின் திருப்பணிக்கு இதுவரை ரூ.425 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 54 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுபெற்றுள்ளது. மேலும், ஆண்டுதோறும் வழங்கி வந்த திருக்கோயில்கள் பராமரிப்பு நிதி, ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களின் வைப்பு நிதி, கிராமபுற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் திருக்கோயில் திருப்பணி நிதி, ரோப்கார் அமைக்க நிதியுதவி என அரசு மானியமாக ரூ.1,008 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரும் தொகை அரசு மானியமாக எந்த ஒரு ஆட்சியிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்கப்படவில்லை. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பதை போல் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் மேலும் தேவையான நிதி தருவதற்கு தயாராக உள்ளார்.

ஒருசிலர் திருக்கோயில்களை ஆயுதமாக கையில் எடுத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர். இந்த ஆட்சியின் செயல்பாடுகள் அதனை கூர்மழுங்க செய்துவிட்டனர். இறையன்பர்கள் இந்த ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் திருப்பணிகளும், பக்தர்களுக்கான வசதிகளும் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்து முதலமைச்சரை பாராட்டுகின்றனர். கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.1 லட்சத்தை ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி நான்காண்டுகளில் 10 ஆயிரம் திருக்கோயில்களுக்கு ரூ. 212.50 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி. என். ஸ்ரீதர், இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷானவாஸ், நாகப்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இரா. மாரிமுத்து, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நாகரெத்தினம் மண்டல இணை ஆணையர் வி.குமரேசன், துணை ஆணையர் பி. ராணி , உதவி ஆணையர் எஸ். இராஜாஇளம்பெருவழுதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.