Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடைச்சல் கொடுக்கும் இரண்டு மாஜிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சாரிசாரியாக இலைக்கட்சியில் இருந்து ஆட்கள் மாற்றுக் கட்சிக்கு தாவிட்டு இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சிக்கு மலராத கட்சி வேஸ்ட் லக்கேஜ். அதனால்தான் அப்போது தோற்றுப்போனேன். நானெல்லாம் தோற்கிற ஆளா?’ என்று மாஜியான குமாரே கொதித்து பேசி கேள்வி எழுப்பி இருந்தார். இப்படியே கட்சிக்காரர்களெல்லாம் ஒதுங்கிப்போன நிலையில், சேலத்துக்காரரின் முடிவால் வேறு வழியின்றி மலராத கட்சியை தோளில் தூக்கிக் கொண்டு திரிய வேண்டி இருப்பதாக அத்தனை பேரின் காதுபட இலைக் கட்சியினர் மாநிலம் முழுக்க இப்போது பேசி வருகின்றனர்.

இதையும் கடந்து கடலோர மாவட்டத்தின் மங்கலமான தாலுகா உள்ளிட்ட பல இடங்களிலும் சாரை சாரையாக இக்கட்சியினர் ஆளும்கட்சிக்கு மாறி வருகிறார்கள். இலைக் கட்சியின் கூட்டணி முடிவால் சிறுபான்மையினர் உள்ளிட்ட மதவாத எதிர்ப்பாளர்களின் வாக்குகள் இலை கட்சிக்கு ஒருபோதும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என்றிருந்த நிலையில், ஒன்றிணைப்பிற்கு முயன்ற சீனியர்களையும் நீக்கி வருவது, சேலத்துக்காரர், தேனிக்காரர், குக்கர் கட்சிக்காரர் என ஒன்று பலவாக கட்சி உடைந்து கிடப்பதும் காலம்காலமாக இலைக்கு வாக்களித்தவர்கள், இம்முறை மக்கள் திட்டங்களால் ஜொலிக்கும் ஆளும்கட்சிக்கே மாறி வாக்களிக்கவும் முடிவெடுத்து தாவத் தயாராகி, ஒவ்வொரு நாளும் இந்த கடலோர மாவட்ட பகுதிகளில் மாறும் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

ஏணிக்கும் சாய்ந்து கொள்ள சுவர் வேண்டும், தோணிக்கும் பாய்ந்து செல்ல கடல் வேண்டும், இப்படித்தான் ஒரு கட்சியென்றாலும் அதிகளவில் தொண்டர்கள் வேண்டும் அல்லவா? தொண்டர்கள் மாற்றுக் கட்சியைக் குறிப்பாக ஆளும்கட்சியை தேடிப் போவதால், இப்பகுதிகளில் இறங்கு முகத்திற்கு இலைக் கட்சி ஆளாகிப் போயிருக்கிறது. எல்லாமே தலைமையின் தாத்பரியம்தான் என்று இம்மாவட்டத்தின் இலைக்கட்சியின் முன்னோடிகள் விரக்தியில் பழமொழியுடன் புலம்புவது பெருத்த சத்தத்துடன் அனைவர் காதுகளிலும் உரக்க ஒலிக்கிறது:.’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைபார்ட்டியில பொறுப்பாளர் நியமிச்சதுல கடும் அதிருப்தி குரல் எழுந்திருக்குதாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டுல இலை பார்ட்டியில இருந்து முக்கிய நிர்வாகிங்க பிரிஞ்சு போய்கிட்டே இருக்குறாங்க. இன்னொரு பக்கம் காலியாக இருக்குற பதவிகளுக்கு பொறுப்பு நியமனங்களும் நடந்து வருது. இதுல குயின்பேட்டை மாவட்டத்துல வெஸ்ட் பகுதியில் உள்ள காலியாக இருந்த பதவிகளுக்கு, சிலருக்கு புதிய பொறுப்பு கொடுத்து அறிவிப்புகள் வந்திருக்குது. இதுல, இந்த பொறுப்புகள் எல்லாமே அந்த டிஸ்ட்ரிக் செக்ரட்ரி பரிந்துரைகளின் பேரில் தான் அறிவிப்பு வருது.

இதுல மாவட்டத்தோட அவை தலைவர் பதவிக்கு சீனியர்கள் பலர் இருக்கையில, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காம வேறு யாருக்கோ பதவி வழங்கிட்டாங்களாம். இதனால, குயின்பேட்டை வெஸ்ட் பகுதி நிர்வாகிங்க சிலபேரு கடும் அதிருப்தியில இருக்குறாங்களாம். அதோட சிலபேரு, கட்சியில நேற்று வந்த வாலிபர்களுக்கு பதவி கொடுத்திருக்காங்க. பார்ட்டிக்காக பல வருஷம் உழைச்ச எங்களுக்கு பதவி வழங்கலையேன்னு அதிருப்தி குரலும், புலம்பல் சத்தமும் ஒருசேர கேட்கத்தொடங்கியிருக்குதாம்.

இந்த புலம்பல் எல்லாமே வர்ற தேர்தல்ல நிச்சயம் எதிரொலிக்கும்னு கட்சியில இருக்குற நிர்வாகிங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரண்டு மாஜிக்கள் சேர்ந்து குட்டையக் குழப்பிட்டு இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்துல இலை கட்சியில் உள்ள இரு மாஜி மா.ெச.க்கள் இணைந்து இருக்கிற போட்டோ சமூக வலை தளத்துல வைரலாகி வருதாம். அதில் மன்னர் பெயரை கொண்ட அந்த முன்னாள் மா.செ. ஒரு பதிவும் போட்டு இருக்கிறாராம். அதில் சில நாட்களில் இரண்டு பேரும் சேர்ந்து முக்கிய தகவல்களை சொல்ல போறோம் என டிவிட் பண்ணி இருக்கிறாராம். என்ன தகவல்களை சொல்ல போறாரு என இலை கட்சிக்காரங்க எதிர்பார்ப்பில் இருக்காங்களாம்.

மன்னர் பெயரை கொண்ட அந்த மாஜி மா.செ. சமூக வலை தளத்துல போடக்கூடிய பதிவுகள் கட்சி மேலிடத்துக்கும் உடனுக்குடன் போகிறதாம். எல்லா பதிவுமே குறிப்பிட்ட அந்த முக்கிய நிர்வாகியை விமர்சித்து தான் வருதாம். தேர்தல் நேரத்துல இவுங்க வேற குழப்பம் பண்ணினால் கட்சிக்கு கெட்ட பெயர் தான் வரும் என நினைத்துள்ள நிர்வாகிகள் சிலர், இது போன்ற பதிவு போடுகிறவர்களை நீக்குங்க என கட்சி தலைமைக்கு கடிதமும் எழுதி உள்ளதாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சீட்டுக்காக இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இப்போதே முறுக்கிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘முறுக்குக்கு பெயர் போன தொகுதியில் ‘இலை கட்சியின் சார்பில் போட்டியிட, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாம்.. யார், பெரியாள் என்பதை நிரூபிக்க இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2 பேர் மறைமுக மோதலில் ஈடுபட்டுள்ளார்களாம்.. குறிப்பாக, மலைக்கோட்டையை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகி தனது ஆதரவாளரை முறுக்கு தொகுதியில் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளாராம்..

அதேபோல், மாஜி அமைச்சர் தனக்கு வேண்டிய நபரை களத்தில் இறக்க முடிவு செய்து, அதற்கான வேலையை ஆரம்பித்துள்ளாராம்.. மலைக்கோட்டையை சேர்ந்த முக்கிய நிர்வாகி, எப்படியாவது தன்னுடைய ஆதரவாளருக்கு ‘சீட்’ வாங்கி விட வேண்டும், இல்லாவிட்டால் நான் யார் என்பதை காட்டுவேன் என நிர்வாகிகளிடம் கூறி வருகிறாராம்.. மாஜி அமைச்சர் தலைமையிடம் நெருக்கமாக உள்ளாராம்.. இதனால் எளிதில் ‘சீட்’ வாங்கி விடலாம் என அவர் நினைக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.