கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2.80 கோடி தங்கம் பறிமுதல்: தஞ்சை இளம்பெண் உள்பட 5 கடத்தல் குருவிகள் கைது
சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 5 பேர் ஒரு குழுவாக மலேசியா சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மூன்று பெண்களையும், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். ஒரு பெண்ணின் உள்ளாடைக்குள் 5 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த 5 தங்க கட்டிகளும் 24 கேரட் சுத்தமான தங்கம் ஆகும். அவைகளின் மொத்த எடை 2.5 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.80 கோடி. இதையடுத்து மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரித்தனர். இவர்களில் 2 பெண்கள், 2 ஆண்கள் ஆகிய 4 பேர் தங்கம் கடத்தும் கடத்தல் குருவிகள். இவர்கள் பலமுறை இதேபோல், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திக் கொண்டு வந்து, சுங்க அதிகாரிகளிடம் சிக்கி பிரபலமான முகங்கள். இதனால், தாங்கள் மட்டும் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்தால், சுங்க அதிகாரிகள் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்து, தங்கத்தை கைப்பற்றி விடுவார்கள் என்பதால் புது முகமாக தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணை முதன்முறையாக கடத்தல் குருவியாக மலேசியா நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
 
 
 
   