காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 25,000 கனஅடி முதல் 50,000 கனஅடி வரை நீர் திறக்கப்பட வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி 50,000 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையிலிருந்து விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதை அடுத்து காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.