நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ம் தேதி ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் (27) காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து, சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், கிருஷ்ணசாமி மகனுமான ஷியாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஷியாம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. இதன் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின் பேரில், சந்திப்பு போலீசார் ஷியாம் மற்றும் நெல்லை மாவட்ட செயலாளர் முத்தையா ராமர் ஆகிய இருவர் மீதும் பிஎன்எஸ் பிரிவு 196(i)(ஏ), 352, 353(i)(சி) மற்றும் 353(ii) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.