*1,005 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடந்த திருவண்ணாமலை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1,005 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை பொது மேலாளர் நொய்லின் ஜான் மற்றும் பயிற்றுனர்கள் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இதில், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், பள்ளிகளுக்கான பிரிவில், ஜூடோ போட்டியில் 185 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 270 மாணவர்களும், பள்ளிகளுக்கான குத்துச்சண்டை போட்டியில் 240 மாணவர்களும், கல்லூரி பிரிவில் 120 மாணவர்களும், பள்ளிகளுக்கான டென்னிஸ் போட்டியில் 120 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 70 மாணவர்களும் என மொத்தம் 1,005 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று 11வது நாளாக மாவட்ட அளவிலான பள்ளிகள் பிரிவில் நடந்த போட்டிகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். இதில், பெண்களுக்கான கால்பந்து போட்டியில் 324 மாணவிகளும், ஹாக்கி போட்டியில் 144 மாணவிகளும், அரசு ஊழியர்களுக்கான கபாடி போட்டியில் 48 பேரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகள் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி வருகிற 12ம் தேதி வரை, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, 2ம் பரிசாக ரூ.2,000, 3ம் பரிசு ரூ.1,000 வழங்கப்படுகிறது. தனிநபர் போட்டிகளில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்பட உள்ளனர்.