கிருஷ்ணகிரியில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!!
கிருஷ்ணகிரி: தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி ரத்த வாந்தி எடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி மல்லப்பா(50). கடந்த மாதம் 27ம் தேதி கூலி வேலைக்காக மல்லப்பா சென்றுள்ளார். அப்போது வேலை செய்யும் இடத்தில் தெருநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்ட போது மல்லப்பா நாய்களை விரட்டியுள்ளார். அப்போது ஒரு நாய் மல்லப்பா முகம் பகுதியில் கடித்துள்ளது. இதனால் ரத்த காயத்துடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நலம் பெற்று வீடு திருப்பியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மல்லப்பாவுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லப்பா உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட நிலையில், சிகிச்சை பலனின்றி மல்லப்பா உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையில், தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தொற்று மல்லப்பாவின் மூளையை பாதித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மல்லப்பா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. மல்லப்பா உயிழப்பை அடுத்து அப்பகுதியில் சிறப்பு ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.