கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 3,046 கன அடியாக உள்ள நிலையில் 2,050 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 49.70 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் ஒசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் வெளியேற்றம் அதிகரிக்கும்போது, ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். கரையோர மக்கள் யாரும் ஆற்றின் கரையில் குளிக்கவோ அல்லது ஆற்றில் இறங்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியது.