Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரியில் முதற்கட்டமாக 52 தனியார் பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு

*கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல்கட்டமாக 52 பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கலெக்டர் சரயு கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய நான்கு வட்டாரங்களில், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 490 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இதில் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஆகிய இரண்டு வட்டாரங்களை சேர்ந்த 52 தனியார் பள்ளிகளின் 315 பள்ளி பஸ்கள், முதல்கட்டமாக பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகள் 2012ன் படி 22 அம்சங்களுடன் இயக்கப்படுகின்றனவா என, பள்ளி ஆய்வு கமிட்டிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, வேக கட்டுப்பாடு மற்றும் வாகன ஆவணங்கள் முறையாக பராமரிப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில், மாணவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள, அவசர கால பொத்தான், பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும்.

குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக ஏறும் பொழுது, படிக்கட்டுகள் மற்றும் தரைதளம் சரியான அளவு இருக்கிறதா என அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுறமும் பள்ளிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இந்த ஆண்டு ஆய்வில், வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் நல்ல முறையில் உள்ளது. போக்குவரத்து துறை சார்பாக, வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அவற்றை நன்கு கவனித்து, மாணவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்றவாறு, வாகனத்தை இயக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பாக, சாலை விபத்து தடுப்பது குறித்து, பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம்.

இருந்தாலும் பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், இந்த வருடமும் நல்லபடியாகவும், மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் பஸ்களை இயக்கி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும். தங்களுடைய ஆரோக்கியத்தையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மூலம், தீ விபத்தின் போது ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் பாபு, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன், அன்புசெழியன், மாவட்ட கல்வி அலுவலர் ரமாவதி, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சக்திவேல் மற்றும் தீயணைப்பு துறையினர் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் கலந்து கொண்டனர்.