*2.23 லட்சம் பொதுமக்கள் கண்டுகளித்தனர்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் 30 நாட்களாக நடந்த 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இக்கண்காட்சியை 2.23 லட்சம் பேர் கண்டுகளித்ததாக கலெக்டர் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, கடந்த மாதம் 21ம் தேதி, 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தாய்லாந்து நாட்டை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த மாங்காய்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஏற்றுமதிக்கு உகந்த ரகங்களான அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, செந்தூரா, இமாம்பசந்த், மல்கோவா, நீலம், மல்லிகா மற்றும் பையூர்-1, சிந்து, பஞ்சவர்ணம், நீலகோவா, பீத்தர், ஆஸ்டின், ரத்னா, ருமானி, சேலம் பெங்களூரா, பெங்களூரா, மல்லிகா, நாட்டி, வடமாநில ரகங்களான ஸ்வர்ணா, குருக்கன், அர்கா அன்மே, ரசல் உள்ளிட்ட 167 ரக மாங்காய்களை காட்சிப்படுத்தினர்.
மேலும், 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு ஏர்கலப்பை, பல்வேறு வகையான பூக்கள், காய்கறிகள் மூலம் அணில், மயில் உள்ளிட்ட மாதிரிகள், சாமந்தி பூக்கள் மூலம் செல்பி பாயிண்ட், காய்கறிகள் மற்றும் மலர்களை கொண்டு மாட்டு வண்டி உள்ளிட்டவை அமைத்திருந்தனர். மாங்கனி கண்காட்சியின் நிறைவு விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, 66 பேருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி கடந்த மாதம் 21ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் (20ம் தேதி) வரை 30 நாட்கள் நடந்தது. இக்கண்காட்சியில், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நடந்தன. கண்காட்சியில் மாம்பழங்களின் மதிப்பு கூட்டல் பற்றி ‘மா’ விவசாயிகள் அறியும் வகையில், மாங்கனியினை அடிப்படை பொருளாக கொண்டு சமையல் போட்டி நடத்தப்பட்டது.
கண்காட்சியை 2.23 லட்சம் பேர் பார்வையிட்டனர். மேலும், அரங்குகள் அமைத்த அனைத்து அரசுத்துறை (50 துறைகள்) அலுவலர்கள், 3 மா உற்பத்தி விவசாயிகள், 3 அரசு துறைகள், மாவில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பு செய்த 3 வணிக நிறுவனங்கள், மா சமையல் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த 4 நபர்கள், நாய் கண்காட்சியில் முதல் 3 இடங்களை பிடித்த அதன் உரிமையாளர்கள் என மொத்தம் 66 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், வேளாண் இணை இயக்குநர் (பொ) காளிமுத்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளவரசன், துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.