Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் அக்.5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் 25ம் தேதி முதல் அக்.5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘இணையதள சேவை’யை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்தோடு பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படும் கோயம்பேடு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக இணையதள சேவை தொடக்கியுள்ளோம். இந்த இணையதளத்தின் வழியாக, 3000க்கும் மேற்பட்ட கடைகள் இந்த அமைப்பில் பராமரிப்பு கட்டணம், விலைகள் நிர்ணயம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் செப்டம்பர் 25ம் தேதி (நாளை) தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை நடைபெறும்.

கோயம்பேடு சந்தை பகுதியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பிலும், மெட்ரோ ரயில் பணிகளையும் ஆயுத பூஜை திருவிழா காலத்தில் 5 நாட்கள் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் மூன்றாவது பெருந்திட்ட வரைவு திட்டம் இந்தாண்டு இறுதி அல்லது 2026 தை மாதம் முதல் நாள் வெளியிடப்படும். அதேபோல், கோயம்பேடு சந்தையை மேம்படுத்த மழைநீர் கால்வாய், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்பேடுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கழிவறைகளும் இலவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சுத்தமான அங்காடியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கடந்த காலத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக நிதி செலவிடப்படவில்லை.

அண்ணாமலை தொடர்ந்து முதல்வரை விமர்சித்து வருகிறார். ஆனால், இந்த ஆட்சி ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் கொண்டாடப்பட கூடிய ஆட்சியாக விளங்குகிறது. அந்த இயக்கத்தாலே ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை போன்றவர்கள் இவ்வாறு பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக், எம்எல்ஏ பிரபாகர ராஜா, கோயம்பேடு அங்காடி முதன்மை நிர்வாக அலுவலர் இந்துமதி, கண்காணிப்பு பொறியாளர் ராஜன்பாபு, கவுன்சிலர் லோகு, வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சிஎம்டிஏ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.