Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேட்டில் பரபரப்பு; பொதுமக்கள் அடகு வைத்த 2 கிலோ நகைகளை விற்று நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக இருந்த வாலிபர் கைது

அண்ணாநகர்: கோயம்பேட்டில் பொதுமக்கள் அடகு வைத்த 2 கிலோ நகைகளை விற்று நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கெகன் ராம் (55). இவர் சென்னை கோயம்பேடு சரஸ்வதி நகர் பகுதியில் அடகு கடை நடத்தி வந்தார். அதே பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கடந்த 30 வருடங்களாக வசித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பணத்தேவைக்காக கெகன் ராமிடம் அடகு வைத்து பணம் பெறுவதும், பின்னர் வட்டியுடன் பணத்தை செலுத்தி விட்டு நகையை மீட்டு செல்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன், கெகன்ராம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதனால் அவரது மகன் சுனில் (25), அடகு கடையை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி அடகு கடை பூட்டப்பட்டிருந்தது. பொதுமக்கள், கடைக்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வெகு நாட்களாக கடை மூடப்பட்டதால் அவரது செல்போனை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் நகைகளை அடகு வைத்தவர்கள், சந்தேகத்துடன், வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போதுதான், குடும்பத்துடன் இரவோடு இரவாக சுனில், ராஜஸ்தானுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே கோயம்பேடு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுனிலின் செல்போனை தொடர்பு கொண்டனர். அப்போதும் சுவிட்ச் ஆப் என வந்தது. எப்படியும் செல்போனை ஆன் செய்வார் என்பதால் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் சுனில், மீண்டும் சென்னைக்கு வந்தால் தகவல் கொடுக்கும்படியும் தெரிவித்திருந்தனர். அதன்படியே வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று சுனில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் வளசரவாக்கம் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, சுனில், அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது, மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதையறிந்து அடகு வைத்திருந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, ‘இப்போதுதான் கைது செய்திருக்கிறோம். நகைகளை எங்கு வைத்துள்ளார் என விசாரித்து உங்களது நகைகளை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். நகைகளை அடகு வைத்தவர்கள் புகார் செய்வதாக இருந்தால் செய்யலாம்’ என்றனர். இதையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சுனிலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: எனது சொந்த ஊர் ராஜஸ்தான். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் திடீரென எனது அப்பா இறந்துவிட்டதால் அடகு கடையை நடத்தும்படி எனது தாயார் கூறினார். வேறு வழி இல்லாமல் நானும் கவனித்து வந்தேன். அப்போதுதான், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலர், நகைகளை அடமானம் வைத்தனர். ஏராளமான நகைகள் சேர்ந்ததால் அவற்றை வேறு கடையில் அடமானம் வைத்து அந்த பணத்தில் நண்பர்களுடன் மதுஅருந்தி ஜாலியாக இருந்தேன்.

பின்னர் தினமும் சொகுசாக இருப்பதற்கு அடகு வைத்த நகைகளை விற்க ஆரம்பித்தேன். அந்த பணத்தில் தினமும் நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றி வந்தேன். இந்த நிலையில்தான் அடகு வைத்த பலர், வட்டி மற்றும் அசலுடன் நகையை திரும்ப பெற வந்தனர். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. அடகு நகைகளை விற்று ஜாலியாக சுற்றி விட்டோம், எப்படி கொடுப்பது என்ற தூங்காமல் தவித்தேன். அதனால் வேறு வழியில்லாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து விட்டு ராஜஸ்தானுக்கு சென்று விட்டேன். போலீசார் என்னை தேடுகிறார்களா? எனவும், பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும் அறிய சென்னை வந்தபோது வசமாக சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் வழக்கு பதிந்து சுனிலை கைது செய்து இன்று காலை புழல் சிறையில் அடைத்தனர். போலீசார் கூறுகையில், ‘பொதுமக்கள் அடகு வைத்த சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகளை ஒன்ரை வருடத்தில் விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக மது அருந்தியும் சொகுசாகவும் இருந்து செலவு செய்துள்ளார். போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதற்கு பிறகு காவலில் எடுத்து விசாரித்து நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளார், எங்கு விற்பனை செய்துள்ளார் என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்படும்’ என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.