கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: அங்காடி நிர்வாகத்துக்கு வியாபாரிகள் நன்றி
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்க ஐந்து சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது போக்குவரத்து சிரமமின்றி வியாபாரிகள் நிம்மதியாக உள்ளனர். இதற்காக அங்காடி நிர்வாகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் உணவு தானிய பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. இதுதவிர தமிழகம் முழுவதும் இருந்தும் லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதுசம்பந்தமாக வியாபாரிகள் கொடுத்த புகாரின்படி, அங்காடி நிர்வாக சிறப்பு அதிகாரிகள் பாண்டியன், அமுதா சுகந்தி பாலா, காமாட்சி நங்கையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சுழற்சிமுறையில் பணியாற்றி வருகின்றனர்.
‘’சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் தடுக்கப்பட்டு வாகனங்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தினமும் அதிகாலையில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி உத்தரவின்படி, மார்க்கெட்டில் வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த 5 சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளனர். இதனால் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகிறது. எனவே, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்.