அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து விடுகின்றனர். மேலும் கால்வாய் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் குப்பைகள் நிரம்பி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடித்து வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கிய இடத்தில் தள்ளுவண்டி கடைகளில் சாப்பாடு வியாபாரம் செய்து வருவதால் அவற்ைற வாங்கி சாப்பிடுகின்றவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வியாபாரிகள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது;
கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பள்ளத்தில் கழிவுநீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதுடன் அதில் குப்பை குவிந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் டிபன், சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. இதுசம்பந்தமாக அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியிடம் புகார் தெரிவித்ததும் தள்ளுவண்டி கடை வியாபாரிகளை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். தற்போது மீண்டும் அதே பகுதியில் தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.