கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு: ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடம் தேர்வு செய்ய உத்தரவு
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் வெளிநபர்கள் தூங்குவதால் செல்போன் பறிப்பு, லேப்டாப், பணம், நகை திருட்டு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் ராஜன்பாபு உத்தரவின்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கும் வெளியாட்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.இந்தநிலையில் இன்று காலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தங்கியிருந்த மக்களை சந்தித்து கேட்டபோது, ‘’எங்களை ஆதரித்து கவனிப்பதற்கு யாரும் இல்லை. எங்களுக்கு பேருந்து நிலையம்தான் வீடு. இதனால் நாங்கள் தங்கி வசித்து வருகின்றோம்’ என்றனர்.
இதையடுத்து அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, பேருந்து நிலையத்தில் தங்கும் மக்களுக்கு இடம் ஏற்படுத்தி தரவேண்டும்’ என்று உத்தரவிட்டார். ‘’பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களை குறித்து கோயம்பேடு துணை ஆணையரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறார்களா குற்றச் சம்பவங்கள் குறித்து வழக்குபதிவு செய்யப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தை இன்னும் கூடுதலாக பராமரிக்கவேண்டும் என்று சி.எம்டி.ஏ அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சிவஞானம், கண்காணிப்பு பொறியாளர் ராஜன்பாபு உள்பட பலர் இருந்தனர்.



