Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் விழா சமூக வலைதளங்களில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம்

*இலவச சைக்கிள்களை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

கோவில்பட்டி : சமூக வலைதளங்களில் பார்ப்பவைகள் அனைத்தையும் நம்ப வேண்டாம் என்று கோவில்பட்டியில் நடந்த இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 506 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலினை பொருத்தவரை கல்வி, மருத்துவம் எனது இரு கண்கள் என கூறுகிறார். பள்ளி கல்வி என்பது தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் ஆகியோர் காலத்திலேயே குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லப்பட்டது. அது தரமான கல்வியாக இருக்க வேண்டுமென முதல்வர் அதிக சிரத்தை எடுத்து வருகிறார்.

அதனாலேயே பள்ளி மாணவ- மாணவியருக்காக பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவ- மாணவியருக்கு பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்களுக்கும் அரசு உதவி செய்கிறது.

இந்த நான்கரை ஆண்டுகளில் 326 பேர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். போட்டியான உலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ- மாணவியரும் அவற்றை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டுமென முதல்வர் அனைத்தையும் செய்து வருகிறார்.

மாணவிகள் செல்போன்கள் பயன்படுத்துவதில் வரைமுறை கொண்டு வர வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்கி பார்க்க வேண்டும். அதன் பின்னர் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சுயக்கட்டுப்பாடு என்பது தேவை.

சமூக வலைதளங்களில் குறிப்பாக பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதில் பார்ப்பவைகளை நம்ப வேண்டாம்.அதுகுறித்து உங்கள் ஆசிரியர்கள், பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

போனில் உங்களது புகைப்படங்கள், எண் ஆகியவற்றை பதிவிட வேண்டாம். மாணவிகள் எதனையும் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கீரைகள், தானியங்கள் என சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கடைகளில் பாக்கெட்களில் விற்கப்படும் சிப்ஸ் ஆகியவற்றை உண்ண கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலலிதா, திமுக மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், ராமர், பீட்டர், சிவசுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேதுரத்தினம், அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜா, தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கவுதம், நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், தவமணி, உலகராணி தாமோதரன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கடம்பூர் முருகன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், பஞ். முன்னாள் தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.