சென்னை: கடற்கரைகளில் நிலைத்தகு சுற்றுலாவை ஊக்குவிக்கவும், நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் எனப்படுகின்ற உலகத்தர அங்கீகாரம் டென்மார்க்கைச் சார்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி நீலக்கொடி சான்றிதழைப் பெற்று தமிழ்நாட்டின் முதல் நீலக்கொடிக் கடற்கரையாகத் திகழ்ந்து வருகிறது. சிறப்புமிகு இச்சான்றிதழினைக் கோவளம் கடற்கரை தொடர்ச்சியாக ஐந்தாவது முறை பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும்நிகழ்வாக அமைந்துள்ளது.
இங்கு வரும் பார்வையாளர்களுக்கு மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், உடைமாற்றும் அறைகள், கழிவறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மிதவை ஊர்திகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு உயிர் காக்கும் காவலர்கள், கண்காணிப்பு கோபுரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இக்கடற்கரைக்கு, கடந்த 2024-25ம் ஆண்டு மட்டும் சுமார் ஐந்தரை லட்சம் பேர் வரை வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பின்னர், மக்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், சென்னை மெரீனா கடற்கரை, கடலூர் வெள்ளிக் கடற்கரை, நாகை மாவட்டத்தின் காமேஷ்வரம் கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் அரியமான் கடற்கரை போன்ற கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடையும் தருவாயில் உள்ளன என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
