கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியது. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியத்துடன் இணைந்து வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்காக ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையில், 20.72 ஏக்கரில் அமைய உள்ள மைதானத்தில், வலைப் பயிற்சி இடம், உணவகம், உயர் தர இருக்கை வசதி, பயிற்சி அரங்கம், வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட இடம்பெற உள்ளன.
பொது-தனியார் பங்களிப்பு முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படஉள்ளது. இதனுடன் கோவையில், அரசு சார்பில் 10 ஏக்கரில் வணிக வளாகம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் வணிக வளாகத்தின் திட்ட வடிவமைப்பு மற்றும் கருத்தியல் உடன், விருப்பமுள்ள நிறுவனங்கள் tidco.com, tntenders.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.
 
  
  
  
   
