‘‘இலை பார்ட்டியில இருந்து அணி மாறிடலாமான்னு முக்கிய நிர்வாகிங்க நேரம் பார்த்து வர்றாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல இலை பார்ட்டியில இருந்து ஒவ்வொரு தலைவர்களாக பிரிஞ்சு போய்கிட்டே இருக்குறாங்க.. சமீபத்துல பெயர்ல கோட்டை வெச்சிருக்குற ஒரு மாஜி மந்திரியும், தேனிக்காரரோட நெருங்கியதால, சேலத்துக்காரர் அவரை அடிப்படை பொறுப்புகள்ல இருந்து தூக்கிட்டாரு.. இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவர்களாக பிரிஞ்சு போய்கிட்டு இருக்குறாங்க.. இதனால, பிரிஞ்சு போன அணிக்கு பலம் அதிகமாகிட்டா, நாமளும் அந்த அணிக்கு போய்டலாமான்னு இலை பார்ட்டி நிர்வாகிங்க யோசிச்சிட்டு இருக்குறாங்களாம்.. இலை பார்ட்டியில ஒரு சில நிர்வாகிகளை தவிர மற்றவர்கள்கிட்ட சேலத்துக்காரர் நெருக்கம் காட்டுறதில்லையாம்.. அதோட, எப்பவும் தனித்து போட்டியிடும் இலை பார்ட்டியோட நிலை, இப்ப, கூட்டணிக்கு கதவு திறந்து வெச்சிட்டு காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்குது.. இப்படி பார்ட்டியோட நிலைமை படு மோசமானதுக்கு காரணம் சேலத்துக்காரர் நடவடிக்கை தான் என்று பார்ட்டிக்குள்ள இருந்தே புகைச்சல் வந்துகிட்டிருக்குது.. இதனால வலுவிழந்து போகுற அணியில இருக்குறத விட வலுவான அணியில தாவிடலமான்னு கணக்கு போட்டு வர்றாங்களாம்.. வெயிலூர், குயின்பேட்டை, பத்தூர் மாவட்டங்கள்ல இருந்தும் முக்கிய நிர்வாகிங்க அணி தாவிடலாமான்னு நேரம் பார்த்துகிட்டு இருக்குறாங்கன்னு இலை பார்ட்டிகள்கிட்ட இருந்தே பேச்சு அடிபடுது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவரை போலவே முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டும் முடிவில் மாஜி அமைச்சரும் இறங்கிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் உள்ள இலை கட்சியின் மாஜி அமைச்சர் மணியானவர் ரெட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்து வருகிறாராம்.. வீடு மற்றும் கட்சி அலுவலகத்திற்கு தன்னை தேடி வரும் ஆதரவாளர்களை சிரித்த முகத்துடன்தான் வரவேற்கிறாராம்.. இது அவரது ஆதரவாளர்களிடம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காம்.. மாஜி அமைச்சரின் இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி நீக்கப்பட்டதுதானாம்.. இதை வைத்து தலைமையிடத்தில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தனக்கு எதிராக செயல்படக்கூடிய கடலோர மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை எப்படியாவது ஓரங்கட்ட மாஜி அமைச்சர் முடிவு எடுத்திருப்பதாக கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம். எப்படியோ இலைக்கட்சி தலைவரை போலவே, மாஜி மணியானவரும் முக்கிய நிர்வாகிகளை கழற்றி விட திட்டமிட்டு வேலை செய்றதா கட்சியினர் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சவால் விடும் சாமியால கில்லாடிக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்காமே என்ன..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மதுவுக்கு பெயர்போன யூனியனில் காலாவதி மருந்து விஸ்வரூபம் எடுத்துள்ளதாம்.. லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பிரபல இயக்குனர்கள் சிக்க அடுத்த பட்டியல் ரெடியாக விட்டதாம்.. மோசடி ஆதாரங்கள் சிக்கிய நிலையில் விரைவில் சிபிஐ வசம் விசாரணை செல்லும் என்ற தகவல் பரவலாக ஓடுகிறதாம்.. இது கடந்த ஆட்சியில் நடந்த கூத்து எனும் தகவல்கள் தொடர்ந்து வலைதளங்களில் கசிய, டென்ஷனான மாஜி சாமியோ, எந்த விசாரணைக்கும் தயார் என சவால் விட்டுள்ளாராம்.. அப்போது சுகாதாரத்தை கவனித்தவர் கில்லாடியானவர் என்பதால், முழு விசாரணை நடந்தாலும் கட்சியின் துரோகி தானே சிக்குவார் என்பதால் கூலாக உலாவுகிறாராம்.. இதனால் சமீபகாலமாக கைக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்த கில்லாடியானவர் திடீரென சைலன்ட் மோடுக்கு மாறி விட்டாராம்.. இனியும் நாங்கள் ஏமாளியாக மாட்டோம் என்ற முணுமுணுப்பு ரெண்டு சாமிகளிடமும் மேலோங்க ஏனாமிற்கு புது சிக்கல் உருவாகியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோட்டையானவரை கூண்டில் ஏற்றப்போறாராமே இலைக்கட்சி தலைவர் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மம்மி மறைவுக்கு பிறகு முதல்வராக சேலத்துக்காரரான இலைக்கட்சி தலைவர் பொறுப்பேற்றுக்கிட்டார். இந்த காலக்கட்டத்தில் தான் சின்னமம்மி ஜெயிலுக்கு போனாங்களாம்.. அப்போது கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் காவலாளியை கொன்றுவிட்டு, முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துக்கிட்டு போனாங்களாம்.. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துக்கிட்டு இருக்காங்க.. இதில் இலைக்கட்சி தலைவர் மீது தான் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் இருந்து வருதாம்.. அவரும் வெளிப்படையாகவே ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என சவால் விடுத்து வருகிறார்.. இவ்வழக்கில் கைதான குற்றவாளிகள், இலைக்கட்சி தலைவரை விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டின் கதவை தட்டினாங்களாம்.. ஆனால் பங்களாவின் ஓனரான சின்ன மம்மியை விசாரித்த போலீஸ், இலைக்கட்சி தலைவரை இன்னும் விசாரிக்கலையாம்.. இந்த நிலையில் தான் இலைக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோட்டையானவர் புது குண்டை உருட்டி விட்டாராம்.. கொடநாட்டின் ஏ1 இவர் தான் என இலைக்கட்சி தலைவர் மீது யாரும் எதிர்பாராத வகையில் கைநீட்டி சொன்னாராம்.. அதோடு 3 கொலைகள் நடந்து விட்டது என்றும் சொன்னாராம்.. இந்த கொள்ளையில் போலீசாரால் தேடப்பட்ட ஜெ. கார் டிரைவர், ஜெ. வீட்டு கம்ப்யூட்டர் ஆபரேட்டர், காவலாளி ஆகியோர் அடுத்தடுத்து செத்துபோனதை தான் இவ்வாறு சொன்னதாக அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. இவ்வளவு தைரியமாக கோட்டையானவர் சொல்கிறார் என்றால் அவரிடமும் முக்கிய ஆதாரம் இருக்கும் எனவும், உடனடியாக அவரிடம் சிபிசிஐடி விசாரித்து தகவல்களை பெறவேண்டும் எனவும் இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதை கேட்ட இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.. இந்த வழக்கோடு தன்னை இணைத்து பேசிய ஜெ. கார் டிரைவரின் அண்ணன் மீது அவதூறு வழக்கை தொடர்ந்த இலைக்கட்சி தலைவர் ரூ.1.10 கோடி அபராதம் தீர்ப்பையும் பெற்றிருக்காராம்.. இச்சூழ்நிலையில் கொடநாடு கொலையில் ஏ1 என சொன்ன கோட்டையானவரை நீதிமன்றம் மூலமாக கூண்டில் ஏற்றப்போறாராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சட்டவிரோதமாக கார்பன் தயாரிப்பது பற்றி புகார்கள் சென்றாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தின் எல்லையில் பாறை என முடியும் ஊர் இருக்கு.. இங்கு சமீபகாலமாக தடை செய்யப்பட்ட தொழிலான தேங்காய் சிரட்டையில் இருந்து கார்பன் தயாரிக்கும் பணியில் சட்டவிரோதமாக பலர் மறைமுகமாக ஈடுபட்டிருக்காங்களாம்.. இந்த மாவட்டத்திற்கு அருகில் உள்ள மூன்றெழுத்து மாவட்டத்தை சேர்ந்த மூன்றெழுத்து பெயரை கொண்ட மலராத கட்சி பிரமுகர் ஒருவர், உள்ளூர் இலைக்கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளாராம்.. இதுகுறித்த புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு சென்றாலும் அவர்களும் கண்டுகொள்வதில்லையாம்.. இதனால், பெரும் சேதம் ஏற்படுவதற்குள் அதிகாரிகள் தலையிட்டு சட்டவிரோத கார்பன் தயாரிப்பை தடுக்க வேண்டுமென அப்பகுதியினர் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
