*வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
கோத்தகிரி : கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது.
அவ்வாறு இடம் பெற்றுள்ள காட்டு யானைகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர், தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.மேலும் உணவு தேடி முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக தேயிலை, காப்பி தோட்டங்கள், சாலைகளில் உலா வருவதால் கோத்தகிரி மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக எவ்வித அச்சமும் இல்லாமல் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே சாலையில் காட்டு யானைகள் உலா வந்தால் புகைப்படம் எடுப்பது, கூச்சலிட்டு தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.