*டிரைவர் காயம்
கோத்தகிரி : கோத்தகிரி அருகே 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியதில் சம்பவ இடத்தில் விவசாயி பலியானார். டிரைவர் படுகாயமடைந்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (60). விவசாயியான இவர், கெட்டிக்கம்பை ஊர் தலைவராக இருந்தார்.
இவர், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொணவக்கரை கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரது பசுமாட்டை வாங்க கெட்டிக்கம்பையை சேர்ந்த தனது நண்பரான சந்திரன் (52) என்பவரை அழைத்து கொண்டு அவரது காரில் கொணவக்கரைக்கு இருவரும் சென்றனர். காரை சந்திரன் ஓட்டினார்.
கொணவக்கரை செல்லும் சாலையில் கண்ணாவரை சோலை என்னும் இடத்தில் உள்ள குறுகிய வளைவில் காரை சந்திரன் திருப்ப முயன்றபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், கார் நொறுங்கியது. இது குறித்த தகவலின் பேரில் கோத்தகிரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நொறுங்கி கிடந்த காரில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரையும் மீட்க முயன்றனர். இதில், ராமசந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்.
பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோத்தகிரி போலீசார் ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.