சியோல்: கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை ஏகதெரினாவை (30) வீழ்த்தி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் (24) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தென் கொரியா தலைநகர் சியோலில் கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் சிறப்பாக ஆடிய போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், அரையிறுதியில் செக் வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் ரஷ்ய வீராங்கனை ஏகதெரினா அலெக்சாண்ட்ரோவா, செக் வீராங்கனை கேதரீனா சினியகோவாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், இகா ஸ்வியடெக், ஏகதெரினா இடையில், நேற்று இறுதிப் போட்டி நடந்தது. போட்டியின் துவக்கத்தில் ஏகதெரினா அற்புதமாக ஆடி புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அவர் எளிதில் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இருவரும் சளைக்காமல் போராடியதால், டைபிரேக்கரில் 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் இகா வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் ஏகதெரினா கடுமையாக போராடியபோதும், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் இகா வெற்றி பெற்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய இகா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.