Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது கூமாபட்டி என்கிற சிறிய கிராமம். பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, அதே ஊரைச் சேர்ந்த இளைஞர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கூமாபட்டியின் பெருமைகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் “கூமாபட்டி எங்கே இருக்கு?” எனத் தேடத் தொடங்கினர். இதனால், இணையத் தேடுதலில் கூமாபட்டி ட்ரெண்டாகத் தொடங்கியது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோயிலாறு அணை.

47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இந்த அணை 1971-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணைகளை நம்பி சுமார் 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது. பிளவக்கல் பெரியாறு அணையின் அருகிலேயே பூங்காவும் உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரானா காரணமாக பொதுமக்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டு ஐந்து ஆண்டு காலம் ஆகியும் இன்னும் பூங்காவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுமுறை நாள்களில் வரக்கூடிய பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்தும் பூங்கா பாழடைந்தும் காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலா தளமாக திகழக்ககூடிய இந்த பூங்காவை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். மேலும் பூங்கா பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படாத நிலையில் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த பூங்காவை தமிழக அரசு சீரமைத்து சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் நீரூற்றுகள், பயணிகள் தங்கிச் செல்வதற்கு போதுமான அறைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வுக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், அப்பொழுது வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைப்பதற்காக 10 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க 10 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பூங்காவில் 3 கி.மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. கிழவன் கோயில் பள்ளிவாசல் முதல் பெரியாறு அணை பூங்கா வரை இரண்டரை கி.மீட்டர் தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கப்படவும் உள்ளது. மேலும் மான் சிலை, காந்தி காலை, காளை, பாரத மாதா, ரயில், பார்வையாளர் கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு, கழிவறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது. பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.