Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கொண்டைக்கடலை...சாகுபடி முறையும் விளைச்சல் கூட்டும் வழியும்..

தமிழகத்தில் பயறு வகைப்பயிர்களில் கொண்டைக்கடலை பயிரை சுண்டல் என்று அழைக்கப்படுகிறது. இதனை சாகுபடி செய்ய சிறந்த பருவம் இராபி பருவம்தான். அப்படிப்பட்ட கொண்டைக்கடலையை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்கார்சாமகுளம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, பெரியநாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதியில் 2100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொண்டக்கடலைப் பயறுக்கு மிக குறைந்த அளவில் நீர் தேவை என்பதாலும் பனிப் பொழிவினை தாங்கி செழித்து வளரக்கூடியது என்பதாலும் இதனை பனிக்கடலை எனவும் அழைக்கிறார்கள். தற்போது கொண்டைக்கடலை அதிக அளவில் தேவைப்படுதால் வெள்ளை, அடர் பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் இடத்திற்கு ஏற்றால் போல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு விதைகள் உற்பத்தி முகமை-யின் மூலம் ஒரு கிலோ விதையினை ஆதார நிலையில் 105-க்கும் சான்று நிலை விதைக்கு ரூபாய் 115 விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கொண்டக்கடலை சாகுபடியின்போது பயிர்களை பராமரிப்பது, இலைவழி ஊட்டச்சத்து தெளித்தல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் போன்ற தொழில் நுட்பங்கள் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. இதனை பின்பற்றினால் கொண்டைக்கடலையில் அதிக மகசூல் பெறமுடியும்.

பொதுவாக, Nbeg-47, Nbeg 49, Nbeg 117 போன்ற ரகங்கள் அதிக மகசூலுக்கு ஏற்ற ரகங்கள். இதனை, நவம்பர் (குளிர்காலம்) மானாவாரி/புரட்டாசி பட்டத்தில் விதைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 70-75 கிலோ விதைகளை விதைக்கும் போது செடிக்கு செடி 10 செ.மீ பாருக்கு பார் 30 செ.மீ இடைவெளி இட வேண்டும். முன்செய் நேர்த்தியாக நிலத்தை 3-4 முறை புழுதிபட நன்கு உழவு செய்ய வேண்டும்.நிலத்தை நன்கு உழுது ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரத்தினை கடைசி உழவிலும் தழை மணி சாம்பல் சத்தினை 12.5:25:12.5 கிலோ என்ற அளவில் இடவேண்டும். விதைப்புக்குப் பின் 15 அல்லது 30ம் நாட்களில் கைகளைக் கொண்டு களை நிர்வாகம் செய்ய வேண்டும். இல்லையென்றால், ஒரு எக்டருக்கு தேவையான பென்டிமெத்தின் 2.5 லிட்டர் என்ற களைக் கொல்லியை விதைத்த 3ம் நாட்களில் மண்ணில் படும்படி களைக் கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளித்து பின் 25 ம் நாள் கைகளைக் கொண்டு களைநிர்வாகம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வழங்கும் ஒரு எக்டருக்கு தேவையான 5 கிலோ நுண்ணூட்ட கலவையை மணலுடன் கலந்து இடுவதால் பயிரின் மகசூல் அதிகரிக்கின்றது. பயிரின் வளர்ச்சியைப் பொருத்து வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், காய்க்கும் தருணம் போன்ற பருவத்தில் நீர்பாய்ச்ச வேண்டும். குறிப்பாக பயிர்வகைப் பயிர் சாகுபடிக்கு நிலத்தில் நீர் தேங்கக்கூடாது. இதனால் செடிகள் அழுகிவிட கூடிய நிலை நேரிடலாம். ஒரு எக்டர்க்கு 12.5 கிலோ டி.ஏ.பி இரு முறைக்கு பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான 12.5 கிலோ டி.ஏ.பி-யை 10-15 லிட்டர் நீரில் முதல் நாளே கலந்து பின்பு நன்கு வடிகட்டி தெளிவான கரைசலை 625 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும். செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் தெளித்தல் வேண்டும். பூச்சி மற்றும் நோய் மருந்துகள் உடன் கலந்து தெளிக்கக் கூடாது.

அசுவுணி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சி, வெட்டுப்புழு, அரைக் காவடிப்புழு கரையான் போன்றவற்றைக் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 50%EC அல்லது பிப்ரோனில் அல்லது மொமேட்டின் பேன்சோயேன் போன்ற மருந்தினை நீரில் கலந்து பயிர் முழுவதும் நனையும் படி தெளிக்க வேண்டும். உலர் வேர்அழுகல் நோய், கழுத்துப்பட்டை அழுகல் நோய் வேர் அழுகல் வாடல் நோய் போன்ற நோயினை கட்டுப்படுத்த மேன்கேசிப் 45 அல்லது மேடாலாக்சில் என்ற பூஞ்சாணக் கொல்லி ஒன்றை தெளிக்க வேண்டும். விதைத்த 85-90 நாட்களில் காய்கள் முற்றிய பின் அறுவடை செய்யவும் காய்களை உடைத்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்கவும். ஒருங்கிணைந்த முறையின் பயிரை பயிரிடுவதன் மூலம் எக்டருக்கு 1000-1150 கிலோ வரை மகசூலை, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.தேசிய உணவு மற்றும் ஊட்டச் சத்துக்கள் இயக்கம் (பயறு வகை) திட்டத்தின் மூலம் விதைகள், திரவ உரம், நுண்ணூட்டக் கலவை, உயிர்க் காரணிகளும் 50 சதவீதம் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையங்கள் அணுகலாம் அல்லது உழவர் செயலி-யின் மூலம் இருப்பு நிலை மற்றும் மானியம் திட்டங்கள் போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ளலாம் என கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு.வே.கிருஷ்ணவேணி அவர்கள் தெரிவித்துள்ளார்.