Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்தாண்டுக்கான 7ம் சுற்று தடுப்பூசி முகாம் வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பசு மற்றும் எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் `` கோமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம்.

இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.ஆகவே, இந்த நோய் கால்நடைகளுக்கு ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள செயல்திட்டம் தீட்டி ஆண்டுக்கு இருமுறை ஜூலை மாதத்தில் தடுப்பூசி பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுவரை தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி 6 சுற்றுக்கள் முடிவடைந்து விட்டது. தற்போது ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி தேசிய கால்நடைநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, நகரியம் மற்றும் நகராட்சிகளில் இந்தத் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனடிப்படையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3 லட்சம் கால்நடைகளுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மேற்படி தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தங்கள் பசுவினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளித்து தங்கள் கால்நடைகளை கோமாரி நோயிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.