கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அலகுடி கிராமம் தோனித்துறை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளமணல் மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அன்புமணி தலைமையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அவர் பேசுகையில், ‘ஆண்டுக்கு குறைந்தது 50 டிஎம்சி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும், மக்களும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாமக சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் ஐஐடி அதிகாரிகளும் வந்து அளவெடுத்ததோடு ரூ.750 கோடி செலவு ஆகும் என்றனர்.
ஆனால் தற்போது வரை அந்த தடுப்பணை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் அப்படியே உள்ளது. கோரிக்கை வைத்தது போல இந்த பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் பகுதியில் உள்ள 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். கிராம மக்களுக்கு குடிநீர் பிரச்னையும் இருக்காதுஇவ்வாறு அவர் பேசினார்.