Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொள்ளிடம் ஆற்றின் கரையில் அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகள்

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களை ஒட்டி அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகளை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பனங்காட்டாங்குடி கிராமத்தில் இருந்து காட்டூர் கிராமம் வரை கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன. இதில் வடரங்கம் கிராமத்தில் குடியிருப்புகளின் ஒரு பகுதி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளன.

இதேபோல் கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு மற்றும் வெள்ள மணல் ஆகிய திட்டு கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரத்தியேகமான தொழில் விவசாயம் சார்ந்த தொழிலாகும். வெள்ளமணல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருடம் தோறும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் போதெல்லாம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் போது மேற்கண்ட திட்டு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து விடுவதால் இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகாரிகள் உதவியுடன் மேடான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்

பின்னர் தண்ணீர் வடிந்த உடன் மீண்டும் கிராமத்திற்கு சென்று வசித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் கரையோர பகுதிகள் வேகமாக ஏற்படும் மண் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றன.

இதில் ஆற்றின் கரையை ஒட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. அதுவும் அனுமதி இல்லாத செங்கல் சூலைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளே திட்டு கிராமங்களின் வேகமான மண்ணரிப்புக்கு காரணமாக அமைகின்றன.

செங்கல் சூளைகள் இயங்குவதற்கு ஆற்றின் கரையை ஒட்டி அதல பாதாளத்திற்கு மண் எடுத்து செங்கல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு கரை பலவீனமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக பனங்காட்டங்குடி கிராமத்தில் பல செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

இதனால் ஆற்றின் கரையை ஒட்டி மண்ணரிப்பு ஏற்பட்டு கரை பலவீனமாக வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. நாதல்படுகை மற்றும் முதலைமேடு கிட்டு ஆகிய இரு திட்டு கிராமங்களிலும் கடந்த 20 வருடங்களாக பல இடங்களில் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டு பல குளங்கள் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டு செங்கல் தயார் செய்யப்பட்டன.

இதில் நாதல்படுகை கிராமத்தில் மட்டும் கடந்த 20 வருட காலத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனை கருத்தில் கொண்டு நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செங்கல் சூளை அமைப்பதை முழுமையாக நிறுத்தி திட்டுப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் இருந்து வருகின்றனர்.

ஆனால் முதலைமேடுதிட்டு கிராமத்தில் இன்னும் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டு குளம் போல் பல இடங்களில் மண் எடுக்கப்பட்டு செங்கல் சூளை நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த செங்கல் சூளைகளை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றின் கரையோர கிராம பகுதிகளில் செங்கல் சூளை அமைப்பதையும் தடை செய்ய வேண்டும். ஆற்றின் கரையை பாதுகாக்கவும் திட்டு கிராமங்களை பாதுகாக்கவும் செங்கல் சூளைகள் இயங்குவதை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே ஆற்றின் கரை பலவீனமாவதை தடுக்கவும், திட்டு கிராமங்களை பாதுகாக்கவும் முடியும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆற்றின் கரையோர விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.