Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொள்ளிடம் அருகே புது மண்ணியாறு பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாய தாமரை

*அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே புது மண்ணியாறு பாசன வாய்க்காலை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புது மண்ணயாறு பாசன வாய்க்கால்.

இது தஞ்சை மாவட்டத்தில் மணஞ்சேரி என்ற இடத்தில் காவிரியிலிருந்து பிரிந்து இறுதியில் கொள்ளிடம் வழியாக சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலந்து பின்னர் வங்க கடலில் சங்கமித்து வருகிறது.

கொள்ளிடம் பகுதியில் மட்டும் சுமார் 10,000 திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த பிரதான பாசன வாய்க்காலில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று பாசன வசதி அளித்து வருகிறது.

புது மண்ணியாறு கொள்ளிடம் பகுதியில் பழையபாளையம் என்ற இடத்தில் உப்பனாற்றில் பிரிந்து அதிகப்படியாக வரும் நீரை வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்று இறுதியில் தாண்டவன்குளம், புதுப்பட்டினம், தற்காஸ் வழியாக செல்லும்போது குறுகிய வாய்க்காலாக சென்று முடிகிறது. இந்த வாய்க்கால் இந்த வருடம் தூர்வாரி ஆழ்படுத்தப்பட்டது. ஆனால் இதில் தற்காஸ் என்ற இடத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை போர்த்தியது போன்று ஆகாய தாமரை வளர்ந்து சூழ்ந்துள்ளது.

இந்த ஆகாயத்தாமரையை சாதாரணமாக அகற்றி விடலாம். அப்படி அகற்றினால் தண்ணீர் மேலும் சற்று வேகமாகச் சென்று வெளியேற வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் ஆகாய தாமரைக் குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆகாய தாமரை வாய்க்காலில் வளர்ந்திருப்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

தண்ணீர் செல்வதை அது தடுக்கவும் வாய்ப்பில்லை. தண்ணீரின் மேல் பகுதியில் மிதந்த நிலையில் இது வளர்ந்து வருகிறது. ஆகாயத்தாமரை வாய்க்காலில் உள்ள தண்ணீரை எளிதில் நீராவி ஆக்கி வாய்க்காலை வற்றவிடாமல் தடுக்கிறது.

தண்ணீரை மாசுபடாமல் காத்து நிற்கிறது. வாய்க்காலில் உள்ள தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாக வைப்பதற்கும் நிலத்தடி நீரை தொடர்ந்து பாதுகாப்பதற்கும் இந்த ஆகாயத்தாமரை உதவியாக இருந்து வருகிறது.

இதனால் ஆகாயத்தாமரையை முற்றிலும் அகற்ற வேண்டியதில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். இருந்தும் அதிகமாக ஆகாயத்தாமரை செடிகள் இருக்கும் இடத்தில் மட்டும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.