கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டிது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது, நீர் சூழ்ந்த பகுதிக்கு இர்பான் மோல்லாவால் செல்ல முடியவில்லை. அதனால் கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து அங்கு சென்றடைந்தார். பின்னர் அங்கு காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார்.
இதை வீடியோவாக எடுத்த சிலர், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து கயிறு கட்டி சென்று மருத்துவம் பார்த்த இர்பானுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.