கொல்கத்தா: கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் 3 நாள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் உயர்மட்ட சிவில் மற்றும் ராணுவ தலைமை அதிகாரிகளை ஒன்றிணைத்து ஆயுத படைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள், முன்னுரிமை பணிகள் குறித்து ஆலோசனை நடத்த 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. இதன்படி, 16வது ராணுவ தளபதிகள் மாநாடு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ராணுவத்தின் கிழக்கு கட்டளை தலைமையகத்தில் நேற்று தொடங்கியது.
3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் இம்மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், முப்படைகளின் தளபதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப்படைகளின் முன்மாதிரியான பங்களிப்பை வெகுவாக பாராட்டினார்.
தேசத்தின் முன்னேற்றத்தில் ராணுவத்தின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். இந்திய ஆயுதப்படைகளின் தொலைநோக்கு பார்வை 2047 ஆவணத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சீர்த்திருத்தங்களின் ஆண்டு- எதிர்காலத்திற்கான உருமாற்றம் என்ற கருப்பொருளுடன் நடக்கும் இம்மாநாட்டில் ஆயுதப்படையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள், ஆழமான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப நவீனமயமாக்கல், பல்வேறு படைப்பிரிவுகளின் தயார்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.