ஐசிசி டி20 தரவரிசையில் 2ம் இடம்: 1ஐ நெருங்கும் திலக், 70ஐ விரும்பும் கோஹ்லி: 66வது இடத்தில் பரிதாப ரோகித்
லண்டன்: ஐசிசி டி20 வீரர்கள் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் திலக் வர்மா 2ம் இடத்தை பிடித்துள்ளார். பட்டியலில் ரோகித் சர்மா 66வது இடத்திலும், விராட் கோஹ்லி 70 இடத்திலும் உள்ளனர். டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் வீரர்களின் சமீபத்திய பட்டியலை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட், 855 புள்ளிகளுடன், மாற்றமின்றி முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா 832 புள்ளிகள் பெற்று, ஒரு இடம் உயர்ந்து 2ம் இடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 782 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 763 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் 5, பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் 6, இலங்கை வீரர் பதும் நிஸங்கா 7 ஆகிய இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். பாக். வீரர் முகம்மது ரிஸ்வான் 8ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 8ம் இடத்தில் இருந்த இந்திய அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் கீழிறங்கி 9ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கையின் குசால் பெரெரா 10ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட் 2 இடங்கள் கீழிறங்கி 16ம் இடத்துக்கு வந்துள்ளார். சஞ்சு சாம்சன் 12 இடங்கள் கீழிறங்கி 29ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சுப்மன் கில் 6 இடங்கள் கீழிறங்கி 38ம் இடத்துக்கு வீழ்ந்துள்ளார். சமீபத்தில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய இந்தியாவின் அபிஷேக் சர்மா 549 புள்ளிகளுடன், 49 இடங்கள் உயர்ந்து 40ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 4 இடங்கள் கீழிறங்கி 66வது இடத்திலும், நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 3 இடங்கள் சரிந்து 70வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.


