மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் திறனை கொண்டு ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆண்டு சம்பளத்தை பிசிசிஐ வழங்கி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 ஆகிய 3 வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் ‘ஏ பிளஸ்’ பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி, 3 வடிவத்திலும் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் சேர்க்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இதனால், இவர்கள் இருவரும் ஏ பிளஸ் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஏ பிரிவுக்கு மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் 22ம் தேதி இணைய வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், வீரர்களின் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ரோகித், கோஹ்லிக்கு ஏ பிரிவு மாற்றப்பட்டு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏ பிளஸ் பிரிவில் ரோகித் சமார், கோஹ்லி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இதில், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் தொடர்வார்கள். சுப்மன் கில் புதிதாக ஏ பிளஸ் பிரிவில் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரோகித், கோஹ்லி விவகாரம் மட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


