ஓமலூர்: கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி என்று கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் திட்டமிட்டு பரப்பும் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக 54ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலூரில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியாவை பொறுத்தவரை இதுவரை, பிரிந்த எந்தக் கட்சியும் மீண்டும் சேர்ந்த வரலாறு கிடையாது. அந்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆர். சோதனையை சந்தித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு சோதனையை சந்தித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எண்ணற்ற பல சோதனைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். அவ்வளவு சோதனைக்கு பிறகும் நிலைத்து நிற்பதற்கு மக்கள் இயக்கமாக அதிமுக இருப்பதே காரணம்.
அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். எத்தனையோ எட்டப்பர்கள், துரோகிகள் நம்மோடு இருந்தும் வீழ்த்த முற்பட்டார்கள். அத்தனை பேரையும் வீழ்த்தி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. இன்னும் சொல்கிறான் பல பேர். கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி என்று. அது என்னவென்று உங்களுக்கே தெரியும். எந்த பூச்சாண்டி காட்டினாலும் அதற்கு நான் பயப்பட மாட்டேன். சட்டத்தின் வழியில் ஆட்சி நடத்தினோம். ஆனால் சில துரோகிகள் திட்டமிட்டு அவதூறு பேசி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு எப்படி விசுவாசிகளாக இருக்க முடியும்?
போலி வாக்காளர்களை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் மிக முக்கியமானது. இதில் அதிமுக நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மை பெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு சில ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். அதை நம்ப வேண்டாம். சிறப்பான கூட்டணி அமையும். அதிமுக தொண்டர்களையும், மக்களையும் மட்டுமே நம்பி உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கொடநாடு வழக்கில் எடப்பாடிதான் ஏ1 குற்றவாளி என்றும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடநாடு பங்களாவில் இருந்து எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆவணங்களை எடுக்கவே கொலைகள் நடந்தது என்றும் குற்றம்சாட்டி இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கூட்டத்தில் ‘துரோகம் செய்தவர்கள் திட்டமிட்டு பரப்பும் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டேன்’ என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ எட்டப்பர்கள், துரோகிகள் நம்மோடு இருந்தும் வீழ்த்த முற்பட்டார்கள். அத்தனை பேரையும் வீழ்த்தி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கிறது.

