ஊட்டி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தற்போது ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட சிலர் ஊட்டியில் உள்ள தனியார் காட்டேஜ் ஒன்றில் தங்கியதாகவும், இரவில் கொடநாடு சென்று கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் தங்கியதாக கூறப்படும் காட்டேஜின் உரிமையாளர் சாந்தாகுமாரியை போலீசார் 14வது சாட்சியாக சேர்த்தனர். இந்நிலையில், 2020ம் ஆண்டு சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர், சாந்தாகுமாரியை தொடர்பு கொண்டு சாட்சி அளிக்க கூடாது என்று மிரட்டல் விடுத்ததாக அவர் ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மீது நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சோலியா, சயான் மற்றும் வாளையார் மனோஜ் மீது தொடரப்பட்ட வழக்கு நிரூப்பிக்கபடாத நிலையில், இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

