வேலூர்: கொடநாடு விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும் என்று திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். காட்பாடியில் இன்று நடைபெற உள்ள வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று வேலூர் வந்த திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தனது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது, அவரது நிலைமையை தெரிவிப்பதாகவே கொள்ள வேண்டும். ஆனால் கொடநாடு விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும்.
2026 தேர்தலில் திமுகவின் நாட்கள் எண்ணப்படுவதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாவம் அவர் நல்ல மனிதர்தான். அங்கு சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லிவிடுவார், அவ்வளவுதான். அதேபோல் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன் அங்கு யாரையும் சந்திக்கவில்லை என்று ெசால்லிவிட்டு தற்போது பாஜ தன்னை அழைத்து பேசியதாக கூறுகிறார். இதன் மூலம் ஒளிந்திருந்த உண்மை வெளிவந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
* மனிதாபிமானம் இல்லாதவர் யார்? விஜய்க்கு கேள்வி
‘கரூர் விவகாரத்தில் மனிதாபமானமின்றி முதல்வர் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல், ஆறுதல் சொல்லாமல் இருந்த விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா?’ என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

