*மலைக்கிராம மக்கள் பீதி
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகளின் கூட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக செந்நாய்களின் கூட்டம் முகாமிட்டு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. செந்நாய்கள் எனப்படும் காட்டு நாய்கள் கூட்டமாக வாழும் தன்மை உடையது.
வன விலங்குகளை வேட்டையாடும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மன்னவனூர் பகுதியில் உள்ள கன்றுக்குட்டியை கடித்து குதறியது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் முகாமிட்டிருந்த செந்நாய்களின் கூட்டத்தை இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
மேல்மலைப் பகுதிகளான மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருக்கும் செந்நாய்களின் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.