கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் விழுந்த மரம்: 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து மேல் மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது கனமழையும், ஒரு சில நேரங்களில் சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் மரங்கள் முறிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.
நேற்று மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னமனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலையில், பூம்பாறை அருகே சாலையின் நடுவே ஒரு ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
அந்த பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றிய பிறகு தற்போது போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய சுற்றுலாப்பயணிகள் மற்றும் அங்கிருந்து வரக்கூடிய விவசாயிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற மழை காலங்களில் ஆபத்தான நிலையில் இருக்க கூடிய மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.