கொடைக்கானல்: கொடைக்கானலில் சாலையில் மரம் முறிந்து விழுந்து நேற்றிரவு ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான மலைச்சாலையில், ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் கூக்கால், குண்டுபட்டி, பழம்புத்தூர், புதுபுத்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இரவு நேரத்தில் டார்ச் லைட் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால், இரவு 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



