*விலை வீழ்ச்சியால் மலைக்கிராம விவசாயிகள் கவலை
*அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க கோரிக்கை
கொடைக்கானல் : கொடைக்கானலில் தற்போது வெள்ளைப்பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. மலைப் பகுதிகளில் முக்கிய விவசாய விளைபயிராக இருப்பது வெள்ளைப்பூண்டு. கொடைக்கானலில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் போதிய மழை பெய்யவில்லை .இந்நிலையில் தற்போது வெள்ளைப்பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. கொடைக்கானலில் வெள்ளைப்பூண்டு மகசூல் அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு வெள்ளைப்பூண்டுக்கு அதிகபட்ச விலை கிடைத்தது. ஒரு கிலோ பூண்டு 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.
இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் குறிப்பாக பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, போளூர், உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வரை பூண்டு பயிரிடப்பட்டு உள்ளது. நல்ல மகசூலும் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட மிக மோசமான அளவிற்கு பூண்டு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கும் கீழாக விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளனர்.
புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் பூண்டு நிலையான விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இதுபற்றி மலைப்பகுதி விவசாயி விவேக் கூறியதாவது, ‘‘ கடந்த ஆண்டு நல்ல விலை கிடைத்த காரணத்தினால் மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுவீச்சில் வெள்ளைப்பூண்டை பயிரிட்டனர். 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு இந்த வெள்ளைப்பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.
போதிய அளவு மழை இருந்தும், நல்ல மகசூல் கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலையில் 200 ரூபாய்க்கும் கீழாக வெள்ளை பூண்டு ஒரு கிலோ விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 200 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விதை பூண்டு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, தமிழக அரசு வெள்ளைப் பூண்டுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். கிலோ 350 ரூபாய்க்கு குறையாமல் அரசே இந்த விலையை நிர்ணயித்தால் வெள்ளைப்பூண்டு விவசாயத்தை காப்பாற்ற முடியும், என்றார்.