கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நடந்து வருகிறது.
இதனையொட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில், மற்ற நாட்களைவிட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
அதன்படி நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கொடைக்கானலில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை, மேகமூட்டம் மற்றும் குளிர் என மாறி மாறி வானிலை நிலவியது.
இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பல்வேறு இடங்களை மகிழ்ச்சியுடன் ரசித்துச் சென்றனர். குணா குகையைக் கண்டு ரசிப்பதற்காகவே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது கொடைக்கானலுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர்.



