கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு எவ்வளவு எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் வந்து செல்ல முடியும், கொடைக்கானல் மலைப்பகுதியின் தாங்கு திறன் மற்றும் வளர்ச்சி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு மலைக்கிராமங்களில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் ஐஐடி குழுவினரின் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை, சுற்றுலாத்துறை, நகராட்சி சுகாதாரதுறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, மின்வாரிய துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டல் அசோசியேஷன், வணிகர் சங்கம், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு கடந்த காலங்களில் எவ்வளவு வருகை புரிந்தனர், எதிர்காலத்தில் எவ்வளவு வருகை தருவார்கள், எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வந்தால் கொடைக்கானல் தாங்கும், கொடைக்கானலில் தாங்கும் திறன் எந்த வகையில் அமைந்துள்ளது, உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு உள்ளது உள்ளிட்டவை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்தனர்.
மேலும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சிரமம் இன்றி திரும்பி செல்வதற்கு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்ய வேண்டும், சாலை வசதி என்னென்ன உள்ளது, தங்கும் விடுதி, உணவு விடுதி பாதுகாப்பாக அமைந்துள்ளதா, வன விலங்குகள் நடமாட்டம், இயற்கை சூழல் அழியாத வண்ணம், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து கருத்து கேட்பு நிகழ்வு நடைபெற்றது.
மேலும் 30 வருடங்களுக்கு முன்பு கொடைக்கானல் அமைந்திருந்த நிலை, தற்போதுள்ள நிலை, விவசாய முறைகள் உள்ளிட்டவை குறித்து ஐஐடி குழுவினர் நடத்திய ஆய்வு மூலம் பெறப்பட்ட தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கூட்டத்திற்கு வந்திருந்த இயற்கை ஆர்வலர்கள் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாற்றுச்சாலை விரைவில் அமைத்திட வேண்டும், வனவிலங்குகள் நகர்ப்பகுதிகள் உலா வருவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஐஐடி குழுவினரிடம் வைத்துள்ளனர். இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.