*சுற்றுலாப்பயணிகள் கடும் அவதி
கொடைக்கானல் : கொடைக்கானலில் பனி கொட்டி கடுங்குளிர் வீசுவதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக காலை, மாலை வேளைகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.
நேற்று மழை பெய்யவில்லை. ஆனால், இரவில் பனிமூட்டம் சூழ கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்தனர். முக்கியச் சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.நேற்று அதிகாலை கொடைக்கானல் நட்சத்திர ஏரி முழுவதும் பனி படர்ந்து விரித்த வெள்ளைக் கம்பளம் விரித்தது போல காணப்பட்டது.
காலை வேளையில் ஏரி நீரின்மீது சூரிய ஒளி படர்ந்தபோது பனி மூட்டம் ஆவியாகி சென்ற காட்சி ரம்மியமாக இருந்தது. அப்போது ஏரிச் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சியை கண்டுரசித்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


