சில கடைகளில் டீ குடித்தால் டீத்தூளின் சுவையே இருக்காது கவனித்திருக்கிறீர்களா? ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூளை வெயிலில் உலர்த்தி மீண்டும் பயன்படுத்துவதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் சிலர். டீக்கடைக்காரருக்கே கூட சில சமயங்களில் இது தெரியாது. அவர் ஏதேனும் லோக்கல் பிராண்ட் வாங்குவார். டீத்தூள் புதிதுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட டீத்தூளில் டார்ட்டாரின் என்ற நிறமியைச் சேர்த்து விற்கிறார்கள் கலப்பட மன்னர்கள். டார்டாரின் நமது செரிமான மண்டலத்தை டார் டாராக கிழிக்கும் மோசமான ரசாயனம். இதைக் கண்டுபிடிக்க ஒரு ட்ரிக் இருக்கிறது. டீத்தூளை ஒரு பேப்பரில் கொட்டி அதன்மேல் சில நீர்த்துளிகள் விட வேண்டும். காகிதத்தில் செந்நிறம் ஒட்டிக்கொண்டால் அதுதான் டார்ட்டாரின். டார்ட்டாரினில் இருந்து தப்பிக்க லோக்கல் பிராண்ட் டீத்தூளுக்கு ஸ்ட்ரிக்ட் நோ சொல்வதுதான் ஒரே வழி.வெள்ளைக்கு நோ? வெள்ளையாக உள்ள உணவுப்பொருள் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் அளவாக உண்ண வேண்டும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக, உப்பு, சர்க்கரை, முட்டை போன்றவை.
உப்பு அதிகரிப்பதால், உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான ஒருவர் தினசரி 5-8 மி.கி உப்பு பயன்படுத்துவது நல்லது. சோடியமும் கலோரியும் 1:1 என்ற விகிதத்தில் இருப்பதுதான் ஆரோக்கியம். அதாவது, 1000 கலோரி உணவில் 1000 மி.கி சோடியம் இருக்க வேண்டும். அதற்கு சற்றுக் குறைவாக இருந்தாலும் தவறு இல்லை. கண்டிப்பாக அதிகமாக இருக்கக்கூடாது. அதுபோலவே, வெள்ளைச் சர்க்கரையும் ரிஸ்க்தான். உடலின் ஊளைச் சதையை அதிகரிப்பதில் சர்க்கரையின் பங்கு அதிகம். கை கால் வலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு வாரங்கள் வெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் நிறுத்திவிட்டாலே வலி பறந்துவிடும் என்கிறார்கள் ஆர்த்தோ மருத்துவர்கள்.
சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் உணவுப் பொருட்களில் ஹைஃபிரக்டோஸ் கார்ன் சிரப், கார்ன் சிரப், ப்ரக்டோஸ், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், சுக்ரோஸ், தேன், மொலாசஸ் கரும்புச்சாறு என்று எழுதப்பட்டிருப்பவையும் இனிப்புகளே. இவற்றில் ஏதேனும் இரண்டு காம்பினேஷனுக்கு மேல் இருந்தால் அதைத் தவிர்ப்பதே நல்லது.பழங்களும் பலன்களும்நாம் தினமும் பழங்கள் சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டது. காலையில் எழுந்து மாலை வரை ஓடிக்கொண்டிருக்கும் நாம் பணத்தைப் பார்க்கிறோமே தவிர பழத்தைப் பார்ப்பது கிடையாது. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு சத்து இருக்கிறது.அமிலச்சத்துள்ள பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய்.துணை அமிலச்சத்து உள்ள பழங்கள்: செர்ரி, ரேஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம்.
இனிப்புப் பழங்கள்: வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம்.