வாஷிங்டன்: ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏஐ வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவரது நிர்வாக முடிவுகள் கடும் சர்ச்சையாகி வருகின்றன. இதனால் அமெரிக்காவிலேயே அவருக்கு எதிராக கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
குறிப்பாக டிரம்ப் மன்னரை போல் ஆட்சி செய்வதாக கண்டனம் தெரிவித்து ‘நோ கிங்ஸ்’ (மன்னர் இல்லை) போராட்டம் விடுமுறை தினங்களில் அமெரிக்கா முழுவதும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 50 மாகாணங்களிலும் நடந்த போராட்டத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டு டிரம்புக்கு எதிராக கோஷமிட்டும் பதாகைகள் ஏந்தியும் பேரணி நடத்தினர்.
இந்நிலையில், ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தை அவமதிக்கும் வகையில் டிரம்ப் ஏஐ வீடியோ ஒன்றை தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மன்னரை போல கிரீடம் அணிந்த டிரம்ப் போர் விமானத்தில் செல்வது போலவும், விமானத்தில் இருந்து சேறு, மலக்கழிவுகளை போராட்டக்காரர்கள் மீது கொட்டி விட்டுச் செல்வது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் தனக்கு எதிரான போராட்டங்கள் அர்த்தமற்றது என்றும் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.