கீழ்ப்பாக்கம் ஓட்டலில் நண்பர்கள், தோழிகளுக்கு கஞ்சா பார்ட்டி பிரபல இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது
* வாட்ஸ்அப் குழு அமைத்து ஆண் நண்பர்களுடன் வாரம்தோறும் உல்லாசம்
* 3 கார், 18 செல்போன், 2 பைக்குகள், 5 கிராம் கஞ்சா பறிமுதல்
* கஞ்சா, மெத்தாபெட்டமின் எங்கிருந்து வாங்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி நண்பர்கள், தோழிகளுக்கு கஞ்சா பார்ட்டி வைத்த பிரபல இசையமைப்பாளரின் மகள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலில் உள்ள பப்பில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பப்பில் பார்ட்டி முடிந்து அனைவரும் ஓட்டலில் 2 அறைகள் வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சந்தேகத்திற்கு இடமான அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 2 அறைகளிலும் இளம் பெண்கள் மற்றும் வாலிபர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அனைவரும் மயக்கத்தில் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தப்படி இருந்தனர். இதை பார்த்த போலீசார் உடனே கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்து, மகளிர் போலீசாரை வரழைத்தனர்.
பிறகு மகளிர் போலீசார் உதவியுடன் கஞ்சா போதையில் இருந்த சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரவல்லிகா (23), திருவான்மியூரை சேர்ந்த ரெஜினா (21), விருகம்பாக்கத்தை சேர்ந்த துர்கா பவானி (25) ஆகிய 3 இளம் பெண்கள் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த ஓட்டல் மேலாளர் சுகுமார் (43), மண்ணடியை சேர்ந்த முகமது இர்பான் (30), பெருங்களத்தூரை சேர்ந்த சக்திவேல் (36), மண்ணடியை சேர்ந்த அபிலாஷ் (27), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜனார்த் (26), நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த கணேஷ் (32), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த இப்ராகிம் (30), பெரியமேடு பகுதியை சேர்ந்த முகமது சாலிக் (25), கிண்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (27), மந்தைவெளி பகுதியை சேர்ந்த தசரதராஜ் (24), மண்ணடியை சேர்ந்த மப்பா (32), அப்துல் ஹக் (34), சிங்கப்பூரை சேர்ந்த முகமது பர்கான் (27), புரசைவாக்கத்தை சேர்ந்த வினோதன் (30), கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த துளசி ராமன் (23) ஆகிய 18 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அனைவரும் ஒவ்வொரு வாரமும் வாட்ஸ் அப் குழு மூலம் ஒன்று சேர்ந்து கஞ்சா மற்றும் மெத்தாபெட்டமின் பயன்படுத்தி இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவது தெரியவந்தது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் பார்ட்டி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடந்த பார்ட்டிக்கு ‘அனந்தபுரத்து வீடு’ படத்தின் இசையமைப்பாளர் மகள் பிரவலிகா (23) என்பவர் பார்ட்டி வைத்தது தெரியவந்தது.
பெங்களூருவை சேர்ந்த இவர், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இவரது ஆண் நண்பர்கள் மூலம் கஞ்சா மற்றும் மெத்தாபெட்டமின் வாங்கி, ஓட்டல் மேலாளர் சுகுமார் உதவியுடன் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு ஓட்டலிலேயே அறை எடுத்து கஞ்சா பார்ட்டி வைத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் கைது செய்யப்பட்ட இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேரை போலீசார் இரவோடு இரவாக எழும்பூர் நீதிமன்ற நடுவர் இந்து லதா முன்பு ஆஜர்படுத்தினர். அனைவரும் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியதால், நீதிமன்ற நடுவர் 18 பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.இருந்தாலும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஓட்டல் மேலாளர் சுகுமார் மற்றும் பார்ட்டி வைத்த இசையமைப்பாளர் மகளிடம் கஞ்சா மற்றும் மெத்தாபெட்டமின் எங்கிருந்து வாங்கப்பட்டது, யார் கொடுத்தனர். அதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சினிமா இசையமைப்பாளர் மகள் ஒருவர் ஆண் நண்பர்களுக்கு கஞ்சா பார்ட்டி கொடுத்து போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.