சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது ஆதவ் அர்ஜுனா, அருண், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் எங்கே போனார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சம்பவம் நடந்த போது புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் இருந்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் அவரும் அவசரமாக அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில், தனது காரை நிறுத்தி நடுரோட்டில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த வீடியோ வைராலாகி உள்ளது.
என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கும் புஸ்ஸி ஆனந்த் புலம்பிக் கொண்டிருப்பதும், அவரை பின்தொடர்ந்து சென்ற பத்திரிகையாளர்களை அவரது உதவியாளர் ஒருவர் சந்திக்க விடாமல் தடுத்ததும் அந்த வீடியோவில் உள்ளது.
நடுரோட்டில் நின்று கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்த்தை சந்திக்க பத்திரிகையாளர் ஒரு முற்பட்டபோது, அவரது உதவியாளர் தடுத்து, ‘என்ன பண்றது என்றே தெரியவில்லை. நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். காலில் கூட விழுகிறேன்... தயவு செய்து பேட்டி எதுவும் எடுக்க வேண்டாம் அண்ணே..’ என்கிறார். மேலும், இத்தனை உயிர்கள் போயிருக்கிறது, பத்திரிகையாளர்கள் மனிதாபமானத்துடன் நடந்து கொள்ளுங்கள், என்ன பண்றது, ஏது பண்றது என்றே தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், சூழ்நிலை சரியில்லை... வேண்டாம் என்று தடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.