Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத்தில் 260 பேர் பலியான விபத்து; விமான தயாரிப்பு நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு: பயணிகளின் 4 உறவினர்கள் அதிரடி

வாஷிங்டன்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் கருவி வடிவமைப்பில் இருந்த குறைபாடே விபத்துக்கு காரணம் எனக் கூறி, தயாரிப்பு நிறுவனங்கள் மீது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் எழும்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 12 ஊழியர்கள், 229 பயணிகள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமானத்தைத் தயாரித்த நிறுவனம் மற்றும் அதன் முக்கிய பாகங்களைத் தயாரித்த நிறுவனம் ஆகியவற்றின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

விமானத்தின் எரிபொருள் இயந்திரத்திற்கு எரிபொருளை கொண்டு செல்லும் இயந்திரத்தின் வடிவமைப்பில் இருந்த குறைபாடு காரணமாகவே, விமானம் புறப்பட்ட உடன் அதன் இயந்திரங்களின் செயல்பாடு நின்றதாகவும், இதுவே விபத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அலட்சியமாகவும், குறைபாடுடனும் வடிவமைக்கப்பட்ட எரிபொருள் துண்டிப்பு கருவியை விமானத் தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்தக் குறைபாடு குறித்த அபாயம் பற்றி இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தெரியும் என்றும், இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டே அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியும், இந்த பேரழிவைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையிலும், எரிபொருள் கட்டுப்பாட்டு கருவி ‘துண்டிப்பு’ நிலைக்குச் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், விமானிகள் அறையில் பதிவான உரையாடலில், ‘ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?’ என ஒரு விமானி கேட்க, ‘நான் நிறுத்தவில்லை’ என மற்றொரு விமானி பதிலளித்ததும் பதிவாகி இருந்தது. விமான நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் இழப்பீடு கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.