மஞ்சூர் : கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்று கொண்டார். நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல்அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக தமிழ்நாடு அரசின் உத்தரவு படி கீழ்குந்தா பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக தூனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் செயல் அலுவலர் மனோகரன் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதத்தில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குந்தா ஒசட்டி குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது, பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பேரூராட்சிகுட்பட்ட பல்வேறு வார்டுகளில் நடைபாதை, கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டார்கள்.


