சட்டவிரோத கிட்னி கொள்ளை உயர் நீதிமன்ற மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கிட்னி கொள்ளை குறித்து உயர் நீதிமன்ற மேற்பார்வையில் உயர்நிலைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்
செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் ஏழை தொழிலாளர்களை குறிவைத்து, அவர்களின் வறுமையை பயன்படுத்தி வெறும் 3 லட்சத்திற்கு அவர்களின் கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இக்கொடூரச் செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஏழை மக்களின் உடல் உறுப்புகளை விற்பனைக்கான பொருளாக பயன்படுத்துவது மனித உரிமையை முற்றிலும் இழிவுபடுத்தும் செயல். இன்றைய சமூகத்தில் சில மனித உறுப்புகள், குறிப்பாக ‘கிட்னி’, ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது என்பது வருத்தத்துக்குரியது. சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனை தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவை ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக் கொண்டு பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து தான் இந்த மோசடி வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்போவதாக நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.